மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கக் கோரி, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நேற்றும் முடங்கியது.
கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடந்த மாதம் 20ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் கடுமையான தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்த நடவடிக்கைக்கு யார் உத்தரவிட்டது என நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க கோரியும், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டு விளக்கம் அளிக்கக் கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் கடந்த 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 3 வாரமும் இரு அவைகளும் முடங்கி எந்த அலுவல்களும் முறையாக நடக்கவில்லை. வரும் 13ம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிய உள்ள நிலையில், கடைசி வாரத்தில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்த நிலையில், நேற்று காலை இரு அவைகளும் தொடங்கியதும் கடும் அமளி நடந்தது.
மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகள் ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது, மாணவர்கள் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்ட விவகாரம் குறித்து விரிவான பதிலை அளிக்க அரசு தயாராக இருப்பதாகவும், அமித்ஷா நேரில் வந்து பதிலளிப்பார் என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். ஆனாலும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால் பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த அமளிக்கு இடையே, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், தீர்ப்பாயங்கள் சீர்த்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆணையத்தை அமைப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மசோதா வழக்கம் போல் அமளிக்கு மத்தியில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதே போல, கூட்டுறவுச் சங்கங்களுக்கு நேரடியாகக் கடன்கள் மற்றும் மானியங்களை வழங்குவதற்காக தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் அதிகார வரம்பை விரிவுபடுத்துவதற்கான தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழக திருத்த மசோதா, கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான கேரள பெயர் மாற்ற மசோதா, கனிம உரிமைகள் மீது மாநில அரசுகள் கூடுதல் வரி விதிப்பதை தடுக்கும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன.
மக்களவை இதுவரை 9 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. அவற்றில் இரண்டின் மீது மட்டுமே விவாதம் நடைபெற்றது. மற்ற மசோதாக்கள் விவாதம் ஏதுமின்றி, அமளிக்கு இடையிலேயே நிறைவேற்றப்பட்டன. இதே போல, மாநிலங்களவையிலும் இதே பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பயந்து போய் அவைக்கு வராமல் இருப்பதே நாடாளுமன்றம் முடங்குவதற்கு காரணம் என மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
மாநிலங்களவையில் டிஜிட்டல் மற்றும் மெய்நிகர் பதிவுகளை நீதிமன்றத்தில் ஏற்கக் கூடிய சாட்சியங்களாக மாற்றுவதற்கான வங்கிப் பதிவேடுகள் சாட்சிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் யுபிஐ மீது எந்த வரியையும் விதிக்கவில்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ இலவசமாகவே தொடரும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார். மழைக்கால கூட்டத்தொடரில் இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ளன.
தமிழ்நாடு தொடர்பான விவகாரங்கள் குறித்து மாநிலங்களவையில் நேற்று திமுக, அதிமுக எம்பிக்கள் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது, திமுக எம்பி பி.வில்சன், ”நாட்டின் மொத்த மக்கள் தொகையைில் 6 சதவீதத்தை கொண்டிருக்கும் தமிழ்நாடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. ஆனால் தமிழ்நாடு தரும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் நமக்கு திரும்ப கிடைப்பது வெறும் 26 பைசா மட்டுமே. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 4 அன்று கர்நாடகா அரசுக்கு எழுதிய கடிதத்தில் மேகதாது அணையை கட்ட வேண்டாம் என்றும், இதுதொடர்பாக தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால் இதுவரை தீர்ப்பாயம் அமைக்கப்படவில்லை. ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மக்கள் வரி செலுத்தும் நிலையில், தீர்ப்பாயம் அமைப்பதில் என்ன சிக்கல்?” என கேள்வி எழுப்பினார். மசோதாவை ஆதரித்து பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடு, கடன் சுமை குறித்து கேள்வி எழுப்பியதால் திமுக, அதிமுக எம்பிக்கள் இடையே கருத்து மோதல் நடந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
யுபிஐ பரிவர்த்தனை இலவசமாக தொடரும்: நிர்மலாசீதாராமன் உறுதி
வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,’ இந்த மசோதாவை மாநிலங்களவை குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவைக்குத் திருப்பி அனுப்பியதன் மூலம், இதற்கான நாடாளுமன்ற நடைமுறை நிறைவடைந்தது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007 ன் பிரிவு 10ஏ பிரிவை திருத்துவதையே இந்த முன்மொழியப்பட்ட சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திருத்தம் ஒரு செயல்முறைக்கு வழிவகுக்கும் ஏற்பாடு மட்டுமே. இது யுபிஐ பயனர்கள் மீது எந்தவொரு வரியையோ அல்லது பரிவர்த்தனைக் கட்டணத்தையோ விதிக்கவில்லை . கட்டணங்களிலிருந்து சட்டப்பூர்வ பாதுகாப்பைத் தொடர்ந்து பெறும் மின்னணு கட்டண முறைகளை, அறிவிக்கை மூலம் குறிப்பிடுவதற்கு இந்த மசோதா அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நுகர்வோருக்கு இலவசமாகவே இருந்து வருகிறது; ஒவ்வொரு இந்தியரும் இனிமேலும் பரிவர்த்தனைக் கட்டணம் ஏதுமின்றி உடனடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். சாதாரண, குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகள் உட்பட பெரும்பாலான வணிகப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்’ என்றார்.







