வரலாறு காணாத சாதனை… அடித்து தட்டி தூக்கிய மேக்ஸ்வெல்… 201ல் நாட் அவுட்..!!

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் உலகக் கோப்பையின் 39ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜத்ரன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ரன் சேஸ் 287 ரன்கள் மட்டுமே. அதுவும் கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிராக 287 ரன்களை சேஸ் செய்துள்ளது. ஆதலால், இந்தப் போட்டியில் 291 ரன்களை சேஸ் செய்யுமா என்ற கேள்வி இருந்தது. அதற்கேற்பவும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரும் இருந்தது.

சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதில், டிராவிஸ் ஹெட் 0, மிட்செல் மார்ஷ் 24, டேவிட் வார்னர் 18, ஜோஷ் இங்கிலிஸ் 0, மார்னஷ் லபுஷேன் 14 ரன் அவுட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6, மிட்செல் ஸ்டார் 3 என்று 18.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதன் பிறகு கிளென் மேக்ஸ்வெல் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். உலகக் கோப்பையில் ஒரு நாள் போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் 200 ரன்களை கடந்து சாதனை மேல் சாதனை படைத்துள்ளார்.

தனி ஒருவனாக அணியையும் வெற்றி பெறச் செய்துள்ளார். அவர் 128 பந்துகளில் 21 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் உள்பட 201 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். அவர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்புகளை ஆப்கானிஸ்தான் வீரர்கள் கோட்டைவிட்ட நிலையில் இப்படியொரு சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் எல்பிடபிள்யூ முறையில் நடுவர் அவுட் கொடுத்ததைத் தொடர்ந்து ரெவியூ கேட்ட நிலையில் அவுட் என்று நினைத்துக் கொண்டு மைதானத்திலிருந்து நடந்து சென்ற மேக்ஸ்வெல் ரெவியூவில் பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்றதைத் தொடர்ந்து திரும்பி வந்து ருத்ரதாண்டவம் ஆடி அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

முஜீப் உர் ரஹ்மான் வீசிய 47ஆவது ஓவரில் மேக்ஸ்வெல் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடித்து ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஏபி டிவிலியர்ஸ் சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா அதிக ரன்களை சேஸ் செய்துள்ளது.