தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொடூரமாக வெட்டிக் கொலை… குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்தார் முதல்வர்..!

ட்டப்பகலில் தூத்துக்குடியில் வி.ஏ.ஓ. வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களாக தமிழகத்தில் வன்முறையும், அராஜகமும் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பாலியல் குற்றங்கள் பதிவாகி வருகின்றன. கத்தி, வெடிகுண்டு கலாச்சாரங்கள் பெருகி வருகின்றன. போட்டியும், பொறாமையும், வன்மமும் மக்களின் மனதில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், விஏஓ மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டியுள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, ராமசுப்புவின் மீது லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியதாகத் தெரிய வருகிறது. இதுகுறித்து, காவல் துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருக்கும் போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தினை அளித்துள்ளது. தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழக அரசு போற்றுகின்றது.

இக்கொடிய சம்பவத்தில் உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், லூர்து பிரான்சிஸின் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.