கன்னட அமைப்பினர் 50 பேர் கைது: கர்நாடகாவில் நிறுவனங்களின் ஆங்கில பெயர் பலகையை சேதப்படுத்தி ஆர்ப்பாட்டம்…

பெங்களூரு: கர்நாடக அரசு அண்மையில், ”வர்த்தக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகைகளில் 60 சதவீதம் க‌ன்னட மொழியில் எழுதி இருக்க வேண்டும்” என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூரு மாநகராட்சி, ”வருகிற பிப்ரவரி 28‍-ம் தேதிக்குள் கன்னட மொழியில் பெயர் பலகைகளை மாற்றாவிட்டால் வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என அறிவித்தது. இந்த நிலையில், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர், ‘டிசம்பர் 26-ம் தேதிக்குள் பெயர் பலகையை கன்னடத்தில் வைக்காவிடில் அவற்றை அகற்றுவோம்” என அறிவித்தனர். கன்னட ரக்ஷன வேதிகேஅமைப்பினர் பெங்களூருவில் நேற்று 2-வது நாளாக‌ கன்னட மொழியில் பெயர் பலகை வைக்காமல் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை அடித்து நொறுக்கினர்.

குறிப்பாக, எம்.ஜி. சாலை, பிரிகேட் சாலை, அவென்யூ சாலை,ஒயிட் ஃபீல்ட், கிருஷ்ணராஜபுரம் ஆகிய இடங்களின் கன்னட அமைப்பினர் வேனில் ஒலி பெருக்கியுடன் வந்து கன்னட மொழியில் பெயர் பலகை வைக்காத பன்னாட்டு நிறுவனங்கள், வர்த்தகநிறுவனங்கள், வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றின் பெயர் பலகைகளை கூரான ஆயுதத்தால் கிழித்து சேதப்படுத்தினர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களையும் கன்னட அமைப்பினர் ஒலி பெருக்கி வாயிலாகவே மிரட்டினர். அங்கிருந்த போலீஸாரும் இதனை கட்டுப்படுத்தாததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினரை போலீஸார் கைது செய்த‌னர். கன்னட அமைப்பினரின் இந்தஅத்துமீறலால் ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, மால் ஆஃப் ஏசியா, யு.பி. சிட்டி உள்ளிட்ட வணிகவளாகங்கள் 2-வது நாளாக நேற்றும் மூடப்பட்டன. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.