ரயில் கோர விபத்து… ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்.!!

மிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்..

ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில் மற்றும் ஷாலிமார் – சென்னை கோரமண்டல் விரைவு ரயில் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் பாஹாநாகா பஜார் ரயில்நிலையம் அருகே ஹவுரா ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விபத்தில் சிக்கியவர்களை மீட்க 700 பேர் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் பி.கே. ஜேனா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரயில் விபத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 900ஐ தாண்டியிருப்பதாகவும் , விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஒடிசா தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.. காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என தீயணைப்புத் துறை தலைவர் சுதான் ஷூ சாரங்கி தகவல் தெரிவித்தார். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவிலும் தொடர்வதாக ஒடிசா தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் விபத்து குறித்து கேட்டறிந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, போக்குவரத்துத்துறை சிவசங்கர் ஆகியோர் ஒடிஷாவிற்கு சென்று மீட்பு பணியை துரிதப்படுத்த உள்ளனர்.. இவர்களுடன் தமிழக போக்குவரத்து துறை செயலாளர், வருவாய் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் செல்கின்றனர். தமிழகத்திலிருந்து மேலும் சில அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

ஒடிசாவில் நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு கருணை இழப்பீடு வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்க்கு ₹10 லட்சம். கடுமையான காயங்களுக்கு ₹2 லட்சமும், சிறு காயங்களுக்கு ₹50,000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்..