கோவையில் நாளை 1,530 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்..!

கோவை மாவட்டத்தில் நாளை (18-ந் தேதி) 1,530 இடங்களில் மெகா கொரோனா
தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்
கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் உத்தரவுப்படி செப்டம்பா் மாத இறுதி வரையில் மட்டுமே பூஸ்டர்
தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். அதன் அடிப்படையில் கோவை
மாவட்டத்தில் 37-வது கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் கிராமப்புறங்களில் 1081 இடங்கள், மாநகராட்சிப் பகுதிகளில் 340
இடங்கள், நகராட்சிப் பகுதிகளில் 109 இடங்கள் என மொத்தம் 1,530 இடங்களில்
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. எனவே, மக்கள் இந்த முகாமை
பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா பூஸ்டர் தடுப்பூசியானது 2-வது தவணைப் பெற்று 6 மாதங்கள் அல்லது
26 வாரம் ஆன 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக அரசு தடுப்பூசி
மையங்களில் செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி முகாம் மூலம் பொதுமக்கள்
மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் அனைவரும் தடுப்பூசி
செலுத்திக் கொள்ளலாம். முகாம் நடைபெறும் இடங்களை coimbatore.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பொது மக்கள் தெரிந்துகொள்ளலாம். 18 முதல் 59 வயதினருக்கான பூஸ்டர் தடுப்பூசி வரும் 30-ந் தேதி வரை மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.