புதுடெல்லி: கார்கில் வெற்றி தின கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளன.
கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 23-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
கார்கில் வெற்றி விழாவை லடாக்கில் பகுதியில் உள்ள மக்கள், இந்திய ராணுவத்துடன் இணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
லடாக்கில் நேற்றே இந்தக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. லடாக்கில் 24-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கார்கில் வெற்றியை நினைவுபடுத்தும் ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவர்களுக்கு லடாக் பகுதியின் ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் சென்குப்தா பாராட்டு தெரிவித்தார். மேலும், கார்கில் வெற்றிக்காக இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு, அப்போது வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் லால் சவுக்கின் கண்டா கர் பகுதியிலிருந்து மூவர்ணக் கொடி பேரணியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.