குரங்கம்மை பரவல் எதிரொலி: தமிழ்நாடு பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு..!

தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு எல்லைப் பகுதியிலிருந்து வருபவர்களை ஸ்டேச்சுரேஷன் பரிசோதனை செய்து கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை சென்ற தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குரங்கம்மை பரிசோதனைக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குரங்கம்மை பரவல் குறித்த ஆய்வு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் பன்னாட்டு விமானங்களில் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் முதல் பாதிப்பு ஏற்பட்டபோதே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு அவர்களின் முகத்திலோ அல்லது முழங்கைக்கு அடியிலோ ஏதாவது கொப்பளங்கள் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா எனக் கண்காணிக்கப்படுவதாகக் கூறினார்.

ஐசிஎம்ஆர் விதிகளின்படி வெளிநாடுகளிலிருந்து வருகின்ற அனைத்து பயணிகளையும் மாஸ் ஃபீவர் ஸ்கிரீனிங் கேம்ப் என்கிற அடிப்படையில் கண்காணிக்கப்படுவதாகவும், அதில் ரேண்டமாக இரண்டு சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இந்த குரங்கம்மை பல்வேறு நாடுகளில் கூடிக் கொண்டிருப்பதாகவும், கடந்த வாரம் 63 நாடுகளிலிருந்து இந்த வாரம் 72 நாடுகளில் அதற்கான பாதிப்பு கூடுதலாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும், கேரளா, ஆந்திரா எல்லைகளைக் கண்காணிப்பதும், தொடர்ந்து எல்லைப் பகுதியிலிருந்து வருபவர்களை ஸ்டேச்சுரேஷன் பரிசோதனை செய்து கண்காணிப்பதாகத் தெரிவித்தார்.

வரவிருக்கும் மழைக்காலத்திற்குச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறையோடு இணைந்து டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வீடுகளில் அவசியம் இல்லாமல் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்துவது, கொசுக்கள் பெருகுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளைப் பொதுமக்களிடம் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

தொடர்ந்து, சிறார்களுக்கான தடுப்பூசி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், சிறார்களுக்கான தடுப்பூசி குறித்து ஒன்றிய அரசு எப்போது அறிவுறுத்துகிறார்களோ அப்போது உடனடியாக பள்ளிகளில் போடப்படும் என்றும், 18 வயது முதல் 59 வயது வாயிலானவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி தனியார் நிறுவனத்தில் கட்டணம் செலுத்திப் போட வேண்டிய சூழ்நிலையை மாற்றி முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று 75 நாட்களுக்கு இலவசமாக அந்த தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், குரங்கம்மைக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், WHO, ஐசிஎம்ஆர் போன்ற அமைப்புகளின் ஆலோசனைப்படி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த அவர், இப்போது 15 இடங்களில் ஆய்வகங்கள் அமைப்பதற்கு ஒன்றிய அரசு பரிசீலிப்பதாகவும், தமிழ்நாட்டில் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்துள்ளதாகவும், அதை அவர்கள் ஏற்பார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.