சென்னை விஜிலென்ஸ் ரெய்டில் ரூ.35 லட்சம் பறிமுதல்-ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நெல்லை போக்குவரத்து துணை ஆணையர் சஸ்பெண்ட்..!

சென்னை: ஊழல் புகாரில் சிக்கிய நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை தமிழக அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் உள்ளது. இங்கு துறை சார்ந்த பிற அலுவலகங்கள் உள்ளன.

இங்கு போக்குவரத்து துறை துணை ஆணையராக நடராஜன் பணியாற்றி வந்தார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி உயர்வுக்கு நடராஜன் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்தன.

இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மார்ச் மாதம் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.35 லட்சம், டைரி ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் துணை ஆணையர் நடராஜன், அவரது உதவியாளர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். லஞ்ச புகாரில் சிக்கிய நடராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில் தான் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து நடராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைவில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.