கோவையில் போதை மாத்திரை விற்ற 2 சிறுவர்களை மடக்கி பிடித்த போலீசார் – 620 மாத்திரைகள் பறிமுதல்..!

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தடுக்க தனிப்படை அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையிலும், ரோந்துகளை தீவிரப்படுத்தியும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து வருகின்றனர்.

குறிப்பாக, போதை பொருட்கள் கல்லூரி மாணவர்களை குறித்து வைத்து விற்கப்பட்டு வருவதால், மாணவர்கள் விடுதி மற்றும் இளைஞர்கள் தங்கக் கூடிய இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டபகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 சிறுவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 620 போதை ஏற்படுத்த கூடிய வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.