கோவையில் இன்று தீயணைப்பு படை வீரர்களுக்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்..!

கோவை: தமிழக அரசின் மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கிறது. தீயணைப்பு துறை டி.ஜி.பி பிராஜ் கிஷோர் ரவி தொடங்கி வைத்தார்.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 5 மண்டலங்களை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் 150 பேர் பங்கேற்கின்றனர். வரும் 23-ந் தேதி வரை தொடர்ந்து இப்போட்டிகள் நடக்கிறது. முதல் 2 நாட்கள் துறை சார்பில் செயல்விளக்கம் மற்றும் திறன் போட்டி நடக்கிறது. இறுதிநாள், தடகளப்போட்டி நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தனி நபர் வாரியாகவும், மண்டலம் வாரியாகவும் பரிசு வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மண்டலத்தில் இப்போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இப்போட்டி நடத்தப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போட்டி கோவையில் நடப்பதால், தீயணைப்பு படை வீரர்களுக்கு இடையே எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. பரிசளிப்பு விழா வரும் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. தீயணைப்பு துறை டி.ஜி.பி. பிராஜ் கிஷோர் ரவி பரிசு வழங்குகிறார்.
விழாவில், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மேற்கு மண்டல இணை இயக்குனர் சத்தியநாராயணன் தலைமையில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் அழகர்சாமி மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர்.