தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்தில் 14,250 பேர் பலி: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்.!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 14,250 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு இதனை தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு 55 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்திருப்பதாக கூறிய அவர், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக இயக்குதல், சீட் பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிய தவறுதல் போன்றவற்றால் அதிகப்படியானோர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டார்.

சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1,026 பேர் சாலை விபத்துகளில் பலியாகி இருப்பதாக அவர் கூறினார். முன்னதாக எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் பள்ளி சிறார்களுக்கான போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப்பேசிய தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, தலைக்கவசம் அணிய வேண்டியதின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். மனித உயிர்கள் என்பது விலைமதிப்பற்றவை. ஒருவர் மரணத்தின் துயரம் அவரது அன்புக்குரிய, நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே புரியும். கொரோனா போன்ற பல்வேறு கொள்ளை நோய்கள் மனித உயிர்களை பறித்து வருகின்றன.

இதேபோல் அவ்வப்போது ஏற்படும் இயற்கை சீற்றங்களும் கொத்து, கொத்தாக உயிர்களை பிடுங்கி வருகின்றன. இவையெல்லாம் இயற்கையின் விதி. நம்மால் இதனை ஒன்றும் செய்து விட முடியாது. ஆனால் சாலை விபத்து மூலம் ஆண்டுதோறும் ஏராளமான உயிர்களை நாம் பறிகொடுத்து வருகிறோம். விபத்துக்கள் குறித்து இயற்கையின் மீது பழிபோட முடியாது. விதிகளை மீறி நமக்கு நாமே குழி தோண்டி கொள்வதுதான் விபத்துகள். முறையான விதிகளை பின்பற்றினால் சாலை விபத்துக்களுக்கு இங்கு இடமே இல்லை. ஆனால் இது தொடர்பாக நாம் அலட்சியமாக இருப்பதால்தான் அதிக மரணங்களை சந்தித்து வருகிறோம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.