திருமணம் தகவல் மையம் மூலம் பழக்கம்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கோவை வாலிபரிடம் ரூ.16¼ லட்சம் ஆட்டைய போட்ட நெதர்லாந்து நாட்டு பெண்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேதுபதி நகரை சேர்ந்தவர் நவீன் (வயது 28).
இவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் ஏ.சி. விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறேன். திருமணம் செய்வதற்காக திருமணம் தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்து இருந்தேன். இந்தநிலையில் என்னுடைய பதிவை பார்த்து நெதர்லாந்து நாட்டில் வசித்து வரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சூசன் என்ற பெண் என்னை தொடர்பு கொண்டு திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். அவர் என்னிடம் எனது சொந்த ஊர் கிருஷ்ணகிரி எனது அப்பா இறந்து விட்டார் என்றும் நெதர்லாந்து நாட்டில் டாக்டராக வேலை செய்து வருவதாக கூறினார். மேலும் அவர் என்னை திருமணம் செய்து கொண்டு சொந்த ஊரில் சொத்துக்கள் வாங்கி குடியேறப்போவதாக கூறினார். திருமணம் செய்ய நானும் சம்மதம் தெரிவித்தேன். இதனையடுத்து அடிக்கடி 2 பேரும் வாட்ஸ்ஆப் அழைப்பு மூலமாக பேசி வந்தோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூசன் தனது தம்பியுடன் டெல்லிக்கு வருவதற்கு டிக்கெட் எடுத்து விட்டதாக கூறி அதனை வீடியோ அழைப்பு மூலமாக காண்பித்தார். நானும் இதனை உண்மை என நம்பினேன். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 24-ந் தேதி எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் டெல்லி விமான நிலையத்தில் இருந்த சுங்க அதிகாரி மணிசர்மா பேசுவதாக கூறினார். அவர் என்னிடம் சூசன், அவரது தம்பி நந்தி ஆகியோர் நெதர்லாந்து நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து உள்ளதாக தெரிவித்தார்.

அவர்கள் வரும் போது 1 லட்சம் யூரோக்களை எடுத்து வந்து உள்ளனர். அதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.85 லட்சம் . எனவே இதற்கு வரியாக ரூ.16 லட்சத்து 24 ஆயிரத்து 400 செலுத்த வேண்டும் என கூறினார். இதனை உண்மை என நம்பிய நான் அவர்கள் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினேன். பின்னர் சூசனின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் தெரிந்தது நான் ஏமாற்றப்பட்டது. எனவே என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.16 லட்சத்து 24 ஆயிரத்து 400 பணத்தை மோசடி செய்த நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.