மது போதையில் தகராறு: பார் உரிமையாளருக்கு கத்தி குத்து- வாலிபர் கைது..!

கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் தனியார் மது பார் உள்ளது. இதன் உரிமையாளர் பிரபாகரன். நேற்று இரவு இந்த பாரில் சூரிய பிரகாஷ் உள்பட சிலர் மதுகுடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது சூரியபிரகாஷ் உள்பட சிலர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனர். பார் உரிமையாளர் பிரபாகரன் அவர்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தியால் பிரபாகரனை குத்தியதாக தெரிகிறது. வயிற்றில் கத்திக்குத்துபட்ட அவர் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே தப்பிச்சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.புரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சூர்ய பிரகாஷ் என்பவர் மட்டும் பிடிபட்டுள்ளார். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். பிடிபட்ட சூர்ய பிரகாஷ் மீது ஏற்கனவே போலீசில் வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கத்திக்குத்தில் காயம் அடைந்த பிரபாகரன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.