கோவையில் குடிப்பதற்கு பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்..!

கோவை தடாகம் 24 வீரப்பாண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). தொழிலாளி. இவரது மகன் செந்தில்குமார் (37). வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஆறுமுகம் வீட்டில் இருந்தார். அப்போது செந்தில்குமார் அங்கு வந்தார். அவர் ஆறுமுகத்திடம் மது மற்றும் பீடி வாங்க என்னிடம் பணம் இல்லை, எனக்கு பணம் வேண்டும் என கேட்டார். அதற்கு ஆறுமுகம் தன்னிடம் பணம் இல்லை. குடிப்பதற்கு பணம் கேட்காதே, வேலைக்கு சென்று சம்பாதித்துக்கொள் என்றார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகத்தை வெட்டி மிரட்டி அங்கிருந்து சென்றார். பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் வலியால் அலறி துடித்தார்.
அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஆறுமுகத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து ஆறுமுகத்தின் மனைவி ராணி தடாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.