ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை…அரசியலாக்கு போது தான் பிரச்னை ஆகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..!

ன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும் போது தான் பிரச்சினை ஆகிறது.

ஒன்றிய அரசு என்று அழைத்து அவமதிக்கும் போது தான் அது பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வென்று நேர்முகத்தேர்வை எதிர்கொள்வோருடன் ஆளுநர் நடத்தும் உத்வேகமூட்டும் ‘எண்ணித் துணிக’ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்தியா முழுவதிலும் இருந்து 80 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு தேர்வர் குறித்தும் தனித்தனியாக பெயர், படிப்பு மற்றும் ஊர் என்ன என்பதை ஆளுநர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து தேர்வர்களின் கேள்விகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் நடக்கும் ஏதேனும் ஒரு பிரச்சனை குறித்து உங்களிடம் கேள்வி எழுப்பப்பட்டால் உதாரணமாக ஜல்லிக்கட்டு பிரச்சினை குறித்து கேட்டால் என்று பேசிய ஆளுநர், ஜல்லிக்கட்டு கலாச்சாரம் சார்ந்த பிரச்சனை. பல ஆண்டுகளாக நடக்கும் நடைமுறை அது. நாம் அதை முறைப்படுத்த வேண்டும் என்றால் விலங்குகளை காயப்படுத்தாத வண்ணம், பாதுகாப்பாக நடத்த முயற்சி எடுக்கலாம்.

மேலும் ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும் போது தான் பிரச்சினை ஆகிறது. ஒன்றிய அரசு என்று அழைத்து அவமதிக்கும் போது தான் அது பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசு என்ற பிரச்சனை பற்றி தமிழ்நாட்டைத் தாண்டி யாருக்கும் தெரியாது. தனி நாகாலாந்து கேட்கும் நாகா குழுக்களின் எண்ணம் என்பது, நாகா இனத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணம் அல்ல.

இந்தியா என்பது பல கலாச்சாரம், பல இனக்குழுக்கள் உள்ள நாடு. இதில் எந்தப் பகுதியிலும் ஒரே இனத்து மக்கள் மட்டும் வசிக்கிறார்கள் என்று சொல்லி , அந்தப் பகுதியை அவர்களுக்காக பிரித்துக் கொடுக்க முடியாது. தனி மாநிலம் என்பது அந்த இடத்தில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களின் பெரும்பான்மை கருத்தாக இருக்க வேண்டும். பழைய புத்தக குறிப்புகளை விட்டு விடுங்கள். நாடு 5 ஆண்டுகளில் பல விதத்தில் மாறி விட்டது. இன்னும் மலை பகுதிகளில் நெட்வொர்க் சென்றடையவில்லை என்றாலும் அதற்கான பணி நடந்து வருகிறது என்று கூறினார்.

இந்தியை தாய்மொழியாக கொண்ட நான் இந்தி எதிர்ப்பு குறித்து பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்ற ஒரு தேர்வரின் கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை. இந்தி தெரிந்து கொள்வதால் என்ன நன்மை என்று சொல்லலாம். இந்தி என்றில்லை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இரு மொழிக் கொள்கை இருந்தாலும் மூன்றாவதாக ஒரு மொழி கற்றுக் கொள்வது நல்லது தான் என்று கூறினார்.