பாய்சன் ஆன சிக்கன் ஷவர்மா… சாப்பிட்ட 12 பேருக்கு உடல்நிலை பாதிப்பு.!!

மகாராஷ்டிராவில் ஆசையாக ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு ஒரே நேரத்தில் மோசமான உடல்நலக்குறைவு ஏற்பட்ட பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சமீப காலங்களாகவே ஹோட்டலுக்கு சென்று உணவுகளைச் சாப்பிடுவோருக்கு திடீர் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக ஆங்காங்கே நடந்து வருகிறது. உணவகங்களில் முறையாக உணவுகள் சமைக்கப்படாமல் பரிமாறப்படுவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதிலும் குறிப்பாக அசைவ உணவுகளைச் சுகாதாரமற்ற முறையில் கையாள்வதும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இவை புட் பாய்சனிங் முதல் உயிரிழப்புகளைக் கூட ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

அப்படியொரு ஷாக் சம்பவம் தான் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரங்கேறி உள்ளது. மும்பையின் கோரேகான் பகுதியில் சாலையோர கடையில் ஷவர்மா சாப்பிட்ட பலருக்கு அடுத்தடுத்து புட் பாய்சனிங் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 12 பேருக்குப் புட் பாய்சனிங் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், நல்வாய்ப்பாக அவர்களுக்கு மோசமான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அந்த 12 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 9 பேர் இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மூன்று பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

கோரேகானின் (கிழக்கு) பகுதியில் உள்ள சந்தோஷ் நகரை அடுத்துள்ள சேட்டிலைட் டவரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சாலையோர கடை ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட உடன் இப்படி அடுத்தடுத்து பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 12 பேருக்குப் புட் பாய்சன் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒன்பது பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று பேர் பெற்று வருகிறார்கள்” என்றார். அதேநேரம் அந்த 12 பேரும் ஒரே நேரத்தில் அல்லது ஒரே கடையில் இருந்து தான் ஷவர்மாவை சாப்பிட்டார்களா என்பது குறித்து எந்தவொரு தகவலையும் அந்த அதிகாரி பகிர்ந்து கொள்ளவில்லை.

ஷவர்மா என்பது இங்கே பலருக்கும் ரொம்பவே விருப்பமான ஒரு உணவாக இருக்கிறது. இருப்பினும், அதை முறையாகச் சமைக்கவில்லை என்றால் மோசமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும். ஏனென்றால் ஷவர்மாவை பொறுத்தவரை அந்த ஷவர்மா ஸ்டாண்டில் மட்டுமே சமைக்கப்படுகிறது. அடுப்பில் வைத்து முறையாக சமைக்கப்படுவதில்லை. இதனால் அந்த ஷவர்மா சரியாகச் சமைக்கப்படாமல் போக வாய்ப்புகள் அதிகம். அதைச் சாப்பிடும் போது தான் இங்கே பலருக்கும் உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது.

கடந்தாண்டு ஷவர்மாவை சாப்பிட்ட சிலர் உயிரிழந்த சம்பவங்களும் கூட நடந்தது. இதையடுத்து ஷவர்மாவுக்கு சில கட்டுப்பாடுகள் கூட விதிக்கப்பட்டது பலருக்கும் நினைவில் இருக்கலாம். இந்தச் சூழலில் தான் மீண்டும் அதேபோன்ற ஒரு பகீர் சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. விரிவான விசாரணைக்குப் பின்னரே இந்தச் சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது தெரிய வரும்.

பலருக்கும் பிடித்த இந்த ஷவர்மா உணவு ஒட்டாமன் பேரரசு அதாவது நவீன துருக்கியில் முதலில் 18 அல்லது 19ஆவது நூற்றாண்டில் முதலில் உருவானது என்று சொல்லப்படுகிறது.. அதன் டேஸ்ட் அட்டகாசமாக இருக்கவே அது பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. ஷவர்மா என்ற சொல் அரபிக் சொல் சேவிர்மே (Sevirme) என்ற துருக்கி மொழியில் இருந்து வந்துள்ளது. இதற்குச் சுற்றுதல் என்ற பொருளாகும்.