தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களில் உள்ள பிரசாத கடைகள் தொடர்பாகப் பல புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருப்பதாகக் குறிப்பிட்டார். இதனைத் தவிர்க்க, அடுத்த மூன்று மாதங்களுக்குள் கோவில் வளாகத்திற்குள்ளேயே பிரசாதங்களைத் தயாரித்து பக்தர்களுக்கு வழங்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று செயல் அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவில் வளாகத்திற்குள் விற்கப்படும் லட்டு, முறுக்கு போன்ற பிரசாதங்களின் அளவு, அதன் கட்டாய விலைப்பட்டியல், தயாரிப்பு தேதி மற்றும் எத்தனை நாட்கள் வரை அதனைப் பயன்படுத்தலாம் என்ற விபரங்கள் அடங்கிய லேபிள்களை ஒட்டுவதையும், அதனைத் தீவிரமாகக் கண்காணிப்பதையும் உறுதி செய்ய கூடுதல் ஆணையர் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். மேலும், பக்தர்கள் தங்குவதற்கான யாத்ரி நிவாஸ் மற்றும் தங்கும் அறைகளை எளிதாக முன்பதிவு செய்யும் வகையிலும், ஆன்லைன் தரிசன சீட்டுகளை எளிதில் பெறும் வகையிலும் ஒரே தளத்தின் கீழ் கோவில் இணையதளங்கள் உடனடியாக மாற்றி வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.








