நீட் தேர்வு எழுத வயது வரம்பு இல்லை- தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி அறிவிப்பு.!!

புதுடெல்லி: 2022 நீட் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு வயது உச்ச வரம்பை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கி உள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு, பொதுப் பிரிவினருக்கு 25 என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 என்றும் கடந்த 2017ம் ஆண்டு சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2021, அக்.21ல் நடந்த 4வது தேசிய மருத்துவ ஆணையம் கூட்டத்தில், நீட்- யுஜி தேர்வில் கலந்து கொள்வதற்கு வயது உச்ச வரம்பு எதுவும் இருக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 2022 நீட் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு வயது உச்ச வரம்பை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கி உள்ளது. வயது வரம்பு நிபந்தனைகள் நீக்கப்பட்டதால், விண்ணப்பதாரர்கள் இப்போது மருத்துவ நுழைவுத் தேர்வில் எத்தனை முறை வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பிற படிப்புகளில் சேர்க்கை பெற்ற பிறகும் கூட கலந்து கொள்ளலாம். வெளிநாடுகளில் சேர விரும்புபவர்களுக்கும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.