5 நாட்களாக தொடர்ந்த போராட்டம்: திடீரென வெடித்த வன்முறை உளவுத்துறை முன்கூட்டியே கணிக்காதது ஏன்..?

சென்னை: கள்ளக்குறிச்சியில் திடீரென ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை தமிழக உளவுத்துறை முன்கூட்டியே கணிக்க தவறியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த மாணவி சில நாட்களுக்கு முன் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் குற்றம்சாட்டினர்.

அதுமட்டுமல்லாமல் மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையில், மாணவி இறந்ததற்கான காரணம் சரியாக குறிப்பிடவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் மாணவியின் உடலை 5 நாட்களாகியும் அவரது பெற்றோர் வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு நாள், இரண்டு நாள் என தொடர்ந்த போராட்டத்தில் பெற்றோர் மற்றும் மாணவியின் உறவினர்கள் மட்டும் கலந்துகொண்ட நிலையில், 4ம் நாளன்று ஊர் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர். ஆனால் அதற்கு முன்னதாக பள்ளி குறித்தும், மாணவியின் மரணம் குறித்தும் வாட்ஸ் அப்பில் தகவல் வெளியாகி பல்வேறு தரப்பினருக்கும் பரவியுள்ளது.

இதற்காகவே ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவில் ஒரே நாளில் 500க்கும் அதிகமான நபர்கள் இணைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்தே 5ம் நாள் போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பள்ளி வளாகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனாலேயே போராட்டக்களம், வன்முறைக் களமாக மாறியுள்ளது.

இரு நாட்களுக்கு மேல் போராட்டம் தொடரும் போதே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பெற்றோரை சந்தித்தனர். அப்போது தமிழக உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்திருக்க வேண்டும். இருந்தும், கண்காணிக்க தவறியதோடு, பள்ளிக்கு முன் பாதுகாப்புக்காக இருந்த போலீசார் எண்ணிக்கையும் அதிகமாக்கப் படாமல் இருந்துள்ளது.

இன்று காலை வன்முறை சம்பவம் தொடங்கிய போது கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் பதுங்கியது, எண்ணிக்கை குறைவாக இருந்தது ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்பட்டது. அதேபோல் வன்முறை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிராக்டர், பெட்ரோல் கேன் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு போராட்டம் ஒவ்வொரு நாளும் தீவிரமாக தொடரும் போதே உளவுத்துறை சரியாக கணித்து காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும். ஆனால் உளவுத்துறையின் கணிப்பு தவறியதால், எதிர்பாராத வகையில், தனியார் பள்ளி வளாகமே அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.