மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட முன்பு இருந்த அரசு செய்து தரவில்லை-பிரதமர் மோடி குற்றசாட்டு..!

20ம் நூற்றாண்டில் உலகில் உள்ள பிற மக்களுக்கு கிடைத்த அடிப்படை வசதிகள் கூட, குஜராத்,இமாச்சலப்பிரதேச மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட முன்பு இருந்த அரசு வழங்கவில்லை என்று காங்கிரஸ் மீது பிரதமர் மோடி மறைமுகமாக குற்றம்சாட்டினார்.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த முறையும் பாஜக ஆட்சியைப்பிடிக்க தீவிரமாக இருந்து வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி அடிக்கடி இந்த மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து வருகிறார்.
இமாச்சலப்பிரதேசம் உனா மாவட்டத்துக்கு முதல்முறையாக வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் வரவேற்றார்.

உனா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தை திறந்து வைத்து, அதை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இந்த ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு கடந்த 2017ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

உனா மாவட்டத்தில் ஹரோலி நகரில் ரூ.1900 கோடி மதிப்பில் கட்டப்படஉள்ள மிகப்பெரிய மருந்துப் பூங்காவுக்கு அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டினார். அதன்பின் உனாவில் உள்ள அம்ப் அனதுராவில் இருந்து புதுடெல்லிக்கு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் கொடி அசைத்து பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

 

அதன்பின் உனா நகரில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

20ம் நூற்றாண்டில் உலகின் பிற நாடுகளில் உள்ள மக்களுக்கு கிடைத்த அடிப்படை வசதிகளைக் கூட, குஜராத், இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு முன்பு இருந்த அரசு வழங்கவில்லை. ஆனால், நாங்கள், 20ம் நூற்றாண்டு வசதிகள் மட்டுமின்றி, 21ம் நூற்றாண்டு வசதிகளையும் சேர்த்து வழங்குவோம்.

ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறு கட்சிக்கு வாக்களிக்கும் புதிய பாணியை இமாச்சலப்பிரதேச மக்கள் வைத்துள்ளார்கள். தாந்தேரா, தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக பல ஆயிரக்கணக்காந கோடி மதிப்புள்ள பரிசுகளை இமாச்சலப்பிரதேச மக்களுக்காக அறிவிக்கிறேன். உனாவுக்கும், இமாச்சலப்பிரதேசத்துக்கும் பண்டிகைக்காலம் விரைவாக வந்துவிட்டது.

இன்று நான் வந்தே பாரத் ரயிலே உனாவில் இருந்து தொடங்கிவைத்திருக்கிறேன். நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவாகும்.

இமாச்சலப்பிரதேசத்தை எனக்கு நினைவிருக்கிறது. இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருந்து. இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்களும், டெல்லியில் இருந்தவர்களும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை. உங்களின் நம்பிக்கைகளையும், ஆசைகளையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை

மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப, ஆசைகளைப் புரிந்து கொண்டு, பாஜக அரசு பணியாற்றுகிறது, அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து தருகிறது. புதிதாக மருந்துப் பூங்கா உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கச்சாப் பொருளும், உற்பத்தியும் இமாச்சலில் நடக்கும்போது மருந்து விலை குறைவாக இருக்கும்.

கிராமப்புறங்களுக்கான சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி ஆகியவற்றோடு சேர்த்து டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். கடந்த கால சவால்களை கடந்து வருவதும், வேகமாக வளர்வதும்தான் புதிய இந்தியா. இமாச்சலப்பிரதேசத்தில் கிராமப்புறங்களில் சாலைகள் அதிவேகமாக மேம்படுத்தப்பட்டு, புதிதாக அமைக்பட்டு வருகிறது. கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் சாலைகள் வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.