உயிரை காப்பாற்றிய இளைஞரின் பேச்சை கேட்கும் காட்டு யானையின் பாசம்-வனத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!!

மிழக – கேரள வன எல்லை பகுதியில் காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் உயிருக்கு போராடி கொண்டிருந்த காட்டுயானைக்கு உணவு அளித்து உயிரை காப்பாற்றிய 22 வயது இளைஞருடன் அந்த காட்டுயானை நட்புடன் பழகி வருகிறது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வன எல்லைப் பகுதியை ஒட்டி கேரள எல்லை பகுதி பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநில சுங்கம் என்ற பகுதியில் 2 வாரமாக காட்டு யானை ஒன்று தன் காலில் ஏற்பட்ட காயத்துடன் எங்கும் நகர முடியாமல் ஒரே இடத்தில் நின்றுள்ளது.

இந்நிலையில் மலைவாழ் மக்கள் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (22), யானை ஒரே இடத்தில் இருப்பதை கண்டு அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது, யானையின் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் சோர்வாக இருப்பதைக் கண்ட அதிர்ச்சியான அவர் காட்டு யானைக்கு உணவளிக்க முன்வந்துள்ளார். அப்பகுதியில் கிடைத்த மூங்கில் இலைகளை யானைக்கு கொடுத்துள்ளார். பசியால் தவித்த அந்த காட்டுயானையும் பிரவீன் கொடுத்த மூங்கில் இலைகளை சாப்பிட்டுள்ளது.

அந்த நாளில் இருந்து தொடர்ந்து காட்டு யானைக்கு உணவு அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பிரவீன். இச்செயலால் பிரவீன் மீது பாசமும் நம்பிக்கையும் கொண்ட காட்டுயானை, அவருடன் நண்பர் போல் பழகி வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கேரள வனத்துறையினர், பிரவீன் மூலம் யானையை ஆற்று பகுதிக்கு அழைத்து வந்து, வன கால்நடை மருத்துவர்களால் காயமுற்ற யானைக்கு சிகிச்சை அளித்தனர். காட்டுக்குள்ளேயே மனிதர்களின் வாசம் தெரியாமல் வளர்ந்து வந்த காட்டுயானை, உதவி செய்த பிரவீனின் பேச்சை கேட்டு  நடப்பதை கண்டு வனத்துறையினரும், பொதுமக்களுக்கு ஆச்சரியமடைந்தனர்.