சென்னையில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் திடீர் ஆய்வு : 4 அதிகாரிகள் மாற்றம்-அமைச்சர் மூர்த்தி அதிரடி ..!

சென்னை: சென்னையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகாரிகளுடன் சென்று அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்களை காத்திருக்க வைத்ததோடு, ஆணங்களை திருப்பி வழங்காமல் இருந்ததற்காக சார்பதிவாளர் உள்பட 4 பேரை அதிரடியாக மாற்ற உத்தரவிட்டார். அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரழிந்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெரிய அளவில் பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும், இதனால் முறைகேடும் பெரிய அளவில் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தவறுகளை களைய பதிவுத்துறை ஐஜியாக சிவன் அருள் நியமிக்கப்பட்டார். இவர், பதிவுத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, ஐஜி சிவன் அருள் ஆகியோர் நேற்று சென்னையில் உள்ள பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். முதலில் திருவல்லிக்கேணியில் உள்ள மத்திய சென்னை 1 இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு 4 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அவை அனைத்தும் பொதுமக்களுக்கு திரும்ப வழங்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் யாரும் காத்திருக்கவில்லை. 4 ஆவணங்கள் நிலுவையில் இருந்தன. நிலுவை ஆவணங்களை உடனடியாக வழங்க அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து, திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு 3 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஒரு ஆவணம் அமைச்சர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டு அவராலேயே திரும்ப வழங்கப்பட்டது. அப்போது, பதிந்த ஆவணத்திற்கு ஆன நேரம் கணக்கிட்டதில் சுமார் 7 நிமிடங்கள் ஆகியது.

ஆவணத்தை பதிந்த சுப்பிரமணியம் என்பவர் தமது ஆவணம் உடனடியாக பதிவு செய்யப்பட்டு 15 நிமிடத்தில் திரும்ப பெற்றதாக அமைச்சரிடம் தெரிவித்தார். நிலுவை ஆவணங்கள் குறித்து பார்வையிடப்பட்டதில் 11 ஆவணங்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக நிலுவை ஆவணங்களை குறைக்க அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர், அண்ணாநகர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று ஆய்வு செய்தார். அங்கு ஆய்வின்போது 33 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 6 ஆவணங்கள் திரும்ப அளிக்கப்பட்டிருந்தன. மேலும், 6 ஆவணங்கள் பதிவுக்காக வைக்கப்பட்டிருந்தன. ஆவணத்தை பதியவும், பதிவு செய்த ஆவணங்களை திரும்ப பெறவும் நிறைய பொதுமக்கள் காத்திருந்தனர். அதில், 90 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் பிற்பகல் 2 மணியிலிருந்து காத்திருப்பதாக தெரிவித்தார் அமைச்சரிடம் தெரிவித்தார். அமைச்சர் ஆய்வு செய்தபோது, நேரம் மாலை 5.30 மணி. வயதான ஒருவர் 3.30 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டிருந்தார்.

இதனால், மென்பொருள்(சர்வர்) இயக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. தாமதத்திற்கான காரணம் சார்பதிவாளர் மற்றும் பணியாளர்களிடம் விளக்கத்தை அமைச்சர் கேட்டார். அங்கிருந்த அதிகாரிகளால் சரிவர பதில் அளிக்க முடியவில்லை. இதனால் அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர் அகிலா உள்பட 4 அதிகாரிகளை வேறு சிறிய அலுவலகத்திற்கு மாற்றிவிட்டு நன்கு வேலை செய்யும் பணியாளர்களை அங்கு நியமனம் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர், பொதுமக்கள் அமர உரிய இருக்கை வசதி செய்து தர உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தை பார்வையிட்டபோது 40 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 34 ஆவணங்கள் திரும்ப வழங்கப்பட்டிருந்தன.

பொறுப்பு சார்பதிவாளர் விடுப்பில் இருந்தார். தேவையின்றி குளிர் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், நிலுவையில் இருந்த 16 ஆவணங்களை விரைவில் பதிவு செய்து ஆவணதாரருக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இறுதியாக அசோக்நகர் சார்பதிவாளர் அலுவலகம் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, 20 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அனைத்தும் திரும்ப வழங்கப்பட்டிருந்தன. ஒரு ஆவணம் மட்டுமே நிலுவையில் இருந்தது. சார்பதிவாளரின் பணியை அமைச்சர் பாராட்டி விட்டுச் சென்றார்.

சைதாப்பேட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக இருந்த சுஜாதா மீது ஏராளமான புகார்கள் வந்தன. அதில் பணம் கேட்பதாகவும், பொதுமக்களை அவமரியாதையாக பேசுவதாக கடும் புகார்கள் வந்தன. இது குறித்து தீவிர விசாரணைக்குப் பிறகு, புகாரில் உண்மை இருந்ததால், காஞ்சிபுரம் நிர்வாகம் (வழிகாட்டி) பிரிவுக்கு மாற்றப்பட்டார்.