கோவையில் என்ஜினீயரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு..!

கோவை காரமடை பெள்ளபாதி அடுத்த ஒட்டர்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் வியாஷ் (வயது 31). இவர் துபாயில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
வியாஷ் துபாயில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தார். பின்னர் காரமடையில் இருந்து ஊட்டி செல்ல முடிவு செய்தார். இதையடுத்து அவர் வீட்டை பூட்டி விட்டு ஊட்டிக்கு சென்றார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த லேப்-டாப், 55 இன்ச் டி.வி ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீடு திரும்பிய வியாஷ் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த டி.வி, லேப்-டாப் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து வியாஷ் காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனையடுத்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வருகிறார்கள்.