காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2வது முறையாக இன்று விசாரணை நடத்த உள்ளதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை சோனியா காந்தி விசாரணைக்கு வந்தபோது, காங்கிரஸ் தொண்டர்கள், போராட்டம், எதிர்ப்பு,ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து, இன்று ராஜ்காட் பகுதியில் யாரும் போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்து, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்று பிடிஐ செய்தி தெரிவிக்கிறது
இருப்பினும் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு இன்று விசாரணை நடத்தும் போது அமைதியான முறையில் போராட்டம் நடத்த காங்கிரஸ் தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
ராஜ்காட் பகுதியில் அமைதியான முறையில் சத்யாகிரஹம் நடத்த அனுமதிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்கள் போலீஸாரிடம் கேட்டுளளனர். ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இங்கு அமைதியாக சத்யாகிரஹம் நடத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் எம்பி கேசி வேணுகோபால் கூறுகையில் ” ராஜ்காட் பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கோரினோம். ஆனால், போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். இது துரதிர்ஷ்டம், கண்டிக்கப்பட வேண்டியது. எதிர்க்கட்சிகளின் குரல்களை மத்திய அரசு ஒடுக்குகிறது. அரசியல் ஆதாயத்துக்காக மத்திய அரசு, அதிகாரத்தையும், அரசு அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்துகிறது. கொடூரமான சக்திகளால் எங்கள் குரலை ஒடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்
கடந்த வாரம் சோனியா காந்தி விசாரணைக்கு வந்திருந்தபோது, காங்கிரஸ் தொண்டர்கள் நாடுமுழுவதும் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார்கள். சோனியா காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் நடத்தியபோராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
சோனியா காந்தியிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணை சிலமணிநேரம் மட்டுமே நடந்தது. அவர் ஏற்கெனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர் என்பதால், குறுகிய நேரத்தில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply