ஆளுநர் எடுத்த திடீர் முடிவு – பொன்முடியின் பதவியேற்பு என்னவாகும்..?

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் நாளைக்குள் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இன்று அமைச்சராக பொன்முடி பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டுள்ளார். தற்போது அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ள நிலையில் நாளை மறுநாள் ஏர் இந்தியா விமானம் மூலம் மீண்டும் சென்னை வர உள்ளார். வழக்கமான பணிகளுக்காக ஆளுநர் டெல்லி புறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பொன்முடியின் பதவி ஏற்பு காலதாமதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது.