கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்..!

கோவை அரசு கலைக் கல்லூரியில் 26 பாடப் பிரிவுகளில் மொத்தம் சுமார் 1,443 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். மாணவர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெற்றது. இதில், இளங்கலை படிப்பைப் பொறுத்தவரை பி.காம். இன்டர்நேஷனல் படிப்பில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. இளமறிவியலில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பப் படிப்புகளில் தலா ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது.
கலந்தாய்வில் மொத்தமுள்ள 1,443 இடங்களில் 1,188 இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ள இடங்களும் அடுத்தகட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்ததை அடுத்து முதலாம் ஆண்டு இளங்கலை, இளம் அறிவியல் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கியது. முதல் சுழற்சியில் மாணவர்களுக்கு காலை 8.45 மணி முதல் பிற்பகல் 1.35 மணி வரையிலும், இரண்டாம் சுழற்சி மாணவர்களுக்கு பிற்பகல் 1.45 மணி முதல் மாலை 6.45 மணி வரையிலும் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.