வாலிபால் மைதானத்தில் ஏற்பட்ட தகராறு… இன்ஜினியரை கல்லால் தாக்கி கொலை: 3 பேர் கைது – 2 பேருக்கு வலை..!

ஜோலார்பேட்டை அருகே மைதானத்தில் வாலிபாலால் ஏற்பட்ட தகராறில் இன்ஜினியர் சரமாரி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்து தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்சம்பேட்டை கடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீதாபதி மகன் பாலகிருஷ்ணன் (50). இவர் இன்ஜினியரிங் படித்து கிடைக்கும் வேலையை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பார்சம் பேட்டை பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் (26), சூர்யா (25) ஆகியோர் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். இதை கோபாலகிருஷ்ணன் நின்று கொண்டு வேடிக்கை பார்த்து உள்ளார். அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் கோபாலகிருஷ்ணனை கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த கஞ்சா போதையில் இருந்து 5 பேர் கோபாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தமிழ்வாணன் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் தடுக்க முயன்ற போது இவர்களையும் தாக்கியுள்ளனர். தொடர்ந்து மைதானத்தில் இருந்த கல்லை எடுத்து கோபாலகிருஷ்ணன் தலை மற்றும் முகத்தின் மீது சரமாரியாக தாக்கி விட்டு 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த தமிழ்வாணன் மற்றும் சூரியா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த கோபாலகிருஷ்ணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கோபாலகிருஷ்ணனை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற 5 பேரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்வாணன், சூர்யா ஆகியோரிடம் டிஎஸ்பி செந்தில் மற்றும் போலீசார் கொலை செய்துவிட்டு தப்பி சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தப்பிச்சென்ற வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் என்பவரின் மகன் சிந்து என்கிற நவீன் குமார் (21), மதிவாணன் என்பவரின் மகன் மௌரிஸ் (21), காளியப்பன் என்பவரின் மகன் நித்திஷ் (22), கோடியூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் நவீன் குமார், சக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த டேவிட் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் சென்று என்கிற நவீன் குமார் மோரிஸ் நித்திஷ் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நவீன் குமார் டேவிட் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.