மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள்: அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை..!

சென்னை: இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என்று அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ள நிலையில் அவரை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நேற்று அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று இந்தி மொழி குறித்து பேசினார்.

அவரது இந்த பேச்சு தான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. ”இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பு இன்றி ஏற்க வேண்டும்” என அவர் கூறினார். இதுதொரடர்பாக அமித்ஷா பேசியதாவது:

”இந்தி மொழி என்பது உள்ளூர் மொழிகளுக்கு போட்டியானதாக இல்லை. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலமாகவே நாடு அதிகாரமிக்கதாக மாறும். இந்தி மொழியை ஏற்றுக்கொள்வதன் வேகம் என்பது குறைவாக உள்ளது. இருப்பினும் இறுதியில் எதிர்ப்பு இன்றி இந்தி மொழியை ஏற்க வேண்டும். ஏனென்றால் இந்தி என்பது உள்ளூர் மொழிகளுக்கு போட்டியில்லை” என தெரிவித்து இருந்தார்.

அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தான் கருத்துக்கு தற்போது பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமித்ஷா மீண்டும் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தலைவர்கள் குற்றம்சாட்ட தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது

”எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!

தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்..