கடும் வெயிலிலும் குடிநீர் குழாயை சீரமைக்க டிரில்லிங் மிஷினில் ரோட்டை உடைத்த கோவை போலீஸ் அதிகாரி – தன்னலமற்ற சேவைக்கு குவியும் பாராட்டுக்கள்.!!

கோவை உப்பிலிபாளையம் போலீஸ் குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த குடியிருப்புக்கு ரயில் நிலையம் ரோடு,கமிஷனர் அலுவலகம் ரோடு, உப்பிலிபாளையம் சந்திப்பு வழியாக குடிநீர் குழாய் போடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.சில நாட்களுக்கு முன்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு எதிர்ப்புறம் உள்ள ரோட்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கசிவு ஏற்பட்டதால்  சரியாக குடிநீர் கிடைக்கவில்லை.இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இதை சரி செய்யும் பணி இன்று நடந்தது.ரேஸ் கோர்ஸ் காவல் நிலையசிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தர்ம நாதன் மேற்பார்வையில் பிளம்பர் மணி உட்பட 4 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு எதிர்ப்புறம் உள்ள ரோட்டில் 3 ஆழத்திற்கு அந்த குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு இருந்தது.உடைப்பு ஏற்பட்ட அந்த குழாயை கண்டுபிடிப்பதற்காக கொளுத்தும் வெயிலில் “டிரில்லிங்” மிஷின் மூலம் ரோட்டை உடைக்கும் பணியில் பிளம்பர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்..அப்போது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏ .தர்ம நாதன் ” ட்ரில்லிங் மிஷினை பிளம்பரிடம் வாங்கி கடினமான ரோட்டை உடைத்து சேதமடைந்த குழாயை கண்டுபிடித்தார்.சுட்டெரிக்கும் வெயிலில் சீருடையுடன் போர்க்கால அடிப்படையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தர்ம நாதன் செய்த தன்னலமற்ற சேவையை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்து பாராட்டினார்கள்.இதையடுத்து குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் தொடங்கியது..