டெல்லி அரசுக்கு ஆதரவு தர வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் அழைப்பு.!!

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.

டெல்லி மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் யூனியன் பிரதேசமாகவே இருக்கிறது. இதனால் அங்கே ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி இருந்தாலும், சில முக்கிய அதிகாரம் மத்திய அரசுக்கே இருந்து வருகிறது. இதைத் துணை நிலை ஆளுநர் கண்காணிப்பார்.

இதற்கிடையே டெல்லி குடிமைப் பணி ஊழியர்களை நியமனம் செய்யும் விவகாரத்தில் கெஜ்ரிவால் அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டது. துணை நிலை ஆளுநர் நியமனம் குறித்த முடிவுகளை எடுத்தார்.

இது குறித்து ஆம் ஆத்மி தொடர்ந்து வழக்கில் சமீபத்தில் முக்கிய தீர்ப்பு வந்தது. அதாவது அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; துணைநிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கவில்லை என்றால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

ஆம் ஆத்மிக்கு சாதமாக இந்த தீர்ப்பு வந்த நிலையில், இதில் மத்திய அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது அதிகாரிகளின் நியமனங்களைக் கண்காணிக்க இரண்டு அதிகாரிகள் மற்றும் டெல்லி முதல்வரைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது. இது சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவையே ரத்து செய்யும் வகையில் இருக்கிறது என்று பலரும் விமர்சித்தனர். இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்து வருகிறார்.