கொரோனா ஊரடங்கை எதிர்த்து போராட்டத்தில் குதித்த பல்கலைகழகத்தில் அடைக்கப்பட்டுள்ள சீன மாணவர்கள் ..!

பெய்ஜிங்: சீனாவின் சில நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், இன்னும் பல நகரங்களில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கை எதிர்த்து சீனாவின் நான்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சீனாவில் கரோனா தொற்று மீண்டு அதிகரித்ததால், அங்கு ஊரடங்கு மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளை சந்தித்து வந்த மக்களுக்கு சீன அரசின் நடவடிக்கைகள் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாடு முழுவதும் பல இடங்களில் கடந்த வாரம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து சில நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை சீன அரசு தளர்த்தியது. ஆனால், இன்னும் 53 நகரங்களில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் உள்ளன. சீனாவின் நான்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ சமூக ஊடகத்தில் நேற்று வெளியானது. இங்குள்ள மாணவர்கள் பல மாதங்களாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. இங்கு பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குளிர்கால விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.

அப்போது ஒரு மாணவர், ”உங்களுக்கு அதிகாரம், நாங்கள் கொடுத்தது. எங்கள் மீது கை வைத்தால், ஃபாக்ஸ்கான் ஐபோன் ஆலையில் ஏற்பட்டது போன்ற போராட்டம் வெடிக்கும்” என எச்சரிக்கை விடுத்தார்.

கரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என சீனாவின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதேபோல் பெய்ஜிங் நகரில் உள்ள சிங்குவா மற்றும் பெகிங் பல்கலைக்கழகங்களிலும் கடந்த மாத இறுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.