எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு…

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கடந்த 27ஆம் தேதி திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கு மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாயுக்கசிவால் பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் வெளியேறினர்.இதற்கிடையில், வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசும் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, எண்ணூரில் அம்மோனியா கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலை தற்போது இயங்கவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆணைப்படி, உரிய சோதனைகளை மேற்கொண்டபிறகே, ஆலை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோரமண்டல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இழப்பீடு தொகை தொடர்பாக ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழு ஓரிரு நாட்களில் தமிழக அரசிடம் முழுமையான அறிக்கையை சமர்பிக்கிறது; அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.