மதங்களுக்கு எதிரி இல்லைன்னு சொல்லும் முதல்வர் இனி இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வீங்களா? -வானதி சீனிவாசன் கேள்வி..?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தது முதலாக திமுக கட்சி கொள்கைகள் குறித்தும், மத அமைப்பு குறித்ததுமான பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அடிப்படையில் கடவுள் மறுப்பு கொள்கையில் வளர்ந்த கட்சியாதலால் இவ்வாறான கருத்துகள் எழுந்தாலும், பல்வேறு மதம் சார்ந்த, கோவில் சார்ந்த வளர்ச்சி பணிகள் மூலம் தாங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிப்பதாக திமுக வெளிப்படுத்தி வருகிறது.

எனினும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது, எதிர்கட்சிகளிடையே கண்டனங்களை உண்டு செய்தது. தொடர்ந்து முதல்வர் குறித்த இந்த சர்ச்சைகள் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் மதவாதத்திற்குதான் எதிரியே தவிர, மதத்திற்கு அல்ல என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் “நாங்கள் மதவாதத்திற்குதான் எதிரியே தவிர மதங்களுக்கு அல்ல என முதல்வர் கூறியிருக்கிறார். மதங்களுக்கு எதிரி இல்லை என்றால் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் முதல்வர் வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்? இனி இந்து மத பண்டிகைகளுக்கும் அவர் வாழ்த்து சொல்ல வேண்டும். மேலும் இந்து மத கோயில்கள், மடங்களின் விவகாரங்களில் தலையிட கூடாது. அதுதான் மதங்களை மதிப்பது, உண்மையான மதசார்பின்மை” என்று கூறியுள்ளார்.