விபத்தில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த பூ விவசாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..!

வத்தலகுண்டு அருகே, விபத்தில் மூளை சாவு அடைந்து, உடல் உறுப்பு தானம் செய்த, பூ விவசாயின் உடல் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்  கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, குன்னுத்துபட்டியை சேர்ந்த, பூ விவசாயி வேலுச்சாமி (55) இவர், வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில், படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேலுச்சாமி மூளை சாவு அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு முன் வந்தனர். இதனை அடுத்து வேலுச்சாமியின் உடல் உறுப்புகள் சிகிச்சையில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு, தானமாக வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்த வேலுச்சாமியின் உடல், குன்னுத்துபட்டி மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது.
தமிழக அரசு அறிவித்தபடி, அவரது உடலுக்கு, ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வட்டாட்சியர் தனுஷ்கோடி, நிலக்கோட்டை  டி.எஸ்.பி.முருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மலர் வளையம் வைத்து அரசு மரியாதை வழங்கி, அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.  உடல் உறுப்பு தானம் செய்த வேலுச்சாமியின் குடும்பத்தினருக்கு, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆறுதல் தெரிவித்தார். உடல் உறுப்பு தானம் செய்த வேலுச்சாமியின் உடலுக்கு அப்பகுதியை  சேர்ந்த ஏராளமான கிராம  பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.