4 மாடி கட்டிடத்தில் இருந்து கயிறு மூலம் இறங்கி கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அசத்தும் வீடியோ வைரல்..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார் இவர் பொறுப்பேற்றதும் போதைப்பொருள் ஒழிப்பதில் தனி கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை எடுத்தார்.இதே போல போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.சைபர் கிரைம் குற்றங்களை ஒழிக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.கோவையில் பல்வேறு இடங்களில் நூலகங்கள் அமைத்துள்ளார்.

இந்த நிலையில் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர ஆயுதப்படையை சேர்ந்த 30 போலீசாருக்கு கடந்த 3 நாட்கள் “கமாண்டோ’. பயிற்சி அளிக்கப்பட்டது.அப்போது 4 மாடி கட்டிடத்துக்குள் ஊடுருவிய தீவிரவாதிகளை பிடிக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.இந்தப் பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சென்ற போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீசருக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் ஹெல்மெட் அணிந்து 4-வது மாடியில் இருந்து கயிறு மூலம் மின்னல் வேகத்தில் கீழே இறங்கினார்.இதை பயிற்சிக்கு வந்த போலீஸ்காரர்களும், அதிகாரிகளும் கைதட்டி பாராட்டினார்கள்..