திருச்சியில் 180 பயணிகளை காப்பாற்றிய விமானிகள்…

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருவது வழக்கம் இந்நிலையில் வழக்கம் போல் இந்த விமானம் இரவு 9.20 மணிக்கு திருச்சிக்கு வந்தது. திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் பின்பக்க இடதுபுற டயரில் காற்று இல்லாமல் பஞ்சராகியிருந்தது விமானிகளுக்கு தெரிய வந்தது. இதனால் திருச்சியில் விமானம் தரையிரங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் மேலே வட்டம் அடித்த படியே இருந்தது. பின்னர் கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவிக்கப்பட்டு, தரையிறக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனையடுத்து விமானிகளும் சாதுர்யமாக செயல்பட்டு, வேக கட்டுப்பாட்டுடன் விமானத்தை திருச்சியில் தரை இறக்கினர். விமானம் ஓடுபாதையை தொட்ட உடனயே அதற்கான வேகத்தை குறைத்து விமானத்தை தொடர்ந்து தரையில் ஓட விடாமல் நிறுத்தினர். பின்னர் மெதுவாக விமானத்தை இயக்கி பயணிகள் இறங்கும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இதனால் இந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக 10.20 மணிக்கு தரையிங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்து வந்த 180 விமான பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த விமானம் மீண்டும் கோலாலம்பூருக்கு புறப்பட்டு செல்ல இயலாததால் அதில் பயணம் செய்ய காத்திருந்த 135 பயணிகளும் திருச்சியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மறுநாள் மலேசியாவில் இருந்து புதிய டயர்கள் விமானம் மூலம் வரவழைக்கப்பட்டு, விமானத்தில் பொருத்தப்பட்டது. இதையடுத்து ஒரு நாள் காலதாமதமாக அந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 10.20 மணிக்கு 135 பயணிகளுடன் மலேசியா புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.