தெலங்கானா முதல்வர் மகள் கவிதா: டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் – குவிந்த தொண்டர்கள்..!

புதுடெல்லி: தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழலில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில், கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, 9ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த 8ம் தேதி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கவிதா, பெண் ஒருவரிடம் விசாரணை நடத்துவதாக இருந்தால் அவரை அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்த சட்டத்தில் இடம் இருப்பதாகக் கூறி எனவே தன்னை தனது வீட்டில் வைத்து விசாரணை நடத்துமாறு கோரினார். இதை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தெரிவித்தது.

பின்னர், நேரில் வர ஒப்புக்கொண்ட கவிதா, மார்ச் 16ம் தேதி நேரில் ஆஜராவதாகத் தெரிவித்திருந்தார். இதை அமலாக்கத்துறை ஏற்க மறுத்ததை அடுத்து மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராவதாக கவிதா தெரிவித்திருந்தார். இதை அமலாக்கத்துறை ஏற்றுக்கொண்டதை அடுத்து, இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

டெல்லியில் உள்ள கே. சந்திரசேகர ராவின் இல்லத்தில் கவிதா உள்ளார். அவரது சகோதரரும் பாரத் ராஷ்ட்ரிய சமிதியின் மூத்த தலைவருமான கே.டி. ராமாராவும் அங்கு வந்துள்ளார். ஏராளமான கட்சித் தொண்டர்களும் அங்கு குவிந்துள்ளனர்.

முன்னதாக, இந்த விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, நாட்டின் 9 மாநிலங்களில் பின்வாசல் வழியாக பாஜக நுழைந்திருப்பதாகவும் ஆனால் தெலங்கானாவில் அவ்வாறு நுழைய முடியாததால் பழிவாங்கும் நோக்கில் தன்னிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். தான் எவ்வித தவறும் செய்யவில்லை என்றும் எனவே விசாரணையைக் கண்டு அஞ்சுவதற்கு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.