டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த புதிய உத்தரவு… கூடுதல் தொகை வாங்கினால் விற்பனையாளர்கள் டிஸ்மிஸ்..!!

விருத்தாசலம்: டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள் கூடுதல் தொகை வாங்கினால் ‘டிஸ்மிஸ்’ என அரசு இருதினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இந்த அறிவிப்பு மது அருந்துவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், விற்பனையாளர் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக பரவலாக புகார் எழுந்தது. இதனால், அரசுக்கு பல்வேறு சர்ச்சைகளும் சங்கடங்களும் ஏற்பட்டன. இந்த நிலையில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஒப்படைக் கப்பட்டது.

அவர் வசம் துறை வந்த நிலையில், ‘டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக தொகை வசூலித்தால், கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை மேற்கொண்டு டிஸ்மிஸ் செய்யப்படுவார்’ என புதிதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பு மது அருந்துவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதிலும், விற்பனை யாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் பேசிய போது அவர்கள் தங்கள் தரப்பு ஆதங்கத்தை தெரிவித்தனர். ‘அமைச்சர் உத்தரவை வரவேற்கிறோம். ஆனால் இங்கு நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை களைய அவர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? உதாரணத்துக்கு, கடையின் வாடகை என ரூ.2,500 வழங்குகின்றனர்.

ஆனால் நாங்கள் ரூ.6 ஆயிரம் வரை தர வேண்டியது உள்ளது. அதேபோல் மின் கட்டணத்தையும் குறிப்பிட்ட அளவே தருகின்றனர். அதைத் தாண்டியே கட்டணம் வருகிறது. அதை நாங்களே செலுத்தி வருகிறோம்.மது புட்டிகள் கொண்டு வரும் லோடு மேனனுக்கு ரூ.2,500 கொடுக்க வேண்டியிருக்கிறது.

‘மாமூல்’ எனப்படும் சமாளிப்பு தொகை, அதாவது காவல்துறை, கலால், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆளுங்கட்சி, அதன் கூட்டணி கட்சி ஒன்றிய நகர பொறுப்பாளர்களின் அடாவடி வசூல், தலைவர்களின் பிறந்தநாள் வசூல் இதையெல்லாம் இனி எப்படி சமாளிப்பது? கடைகளின் மராமத்து வேலைகள், மேஜை, தளவாட சாமான்களின் ஓட்டை உடைசல் அனைத்துக்கும் நாங்களே பொறுப்பு.

சமயங்களில் கடையை அடைத்து விட்டு இரவு நேரத்தில் அன்றைய வசூல் தொகையுடன் திரும்பும் போது, வழிப்பறி நடக்கிறது. குறிப்பிட்ட அந்த பெரும் தொகையை நாங்களே எங்கள் கைகாசில் இருந்து கட்டும்படியாக ஆகி விடுகிறது.

நாங்கள் குறிப்பிடும் இந்த நடைமுறை பிரச்சினைகள் ஒன்றும் அமைச்சரும் அதிகாரிகளும் அறியாதது அல்ல. இதையெல்லாம் கவனத்தில் எடுத்து, அதற்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டு, ஒரு தீர்வு ஏற்படுத்தினால், வாடிக்கையாளர்களைப் போன்று நாங்களும் சந்தோஷப்படுவோம்’ என்கின்றனர்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் லியோ தங்கதுரையிடம் கேட்டபோது, ‘முதலில் அரசு உத்தரவை மதிக்க வேண்டும் ஒவ்வொரு கடையிலும் உள்ள நடைமுறை பிரச்சினைகள் குறித்து அறிக்கையாக கேட்டுள்ளோம். அந்த அறிக்கையை ஆராய்ந்து, அவர்களுக்கு கூடுதல் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்..