அமெரிக்காவில் கோலாகலமாக கொண்டாடிய தமிழர் திருநாள்..!

லிபோர்னியா: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகை கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தை திருநாள், தமிழர் திருநாள், என அழைக்கப்படும் இந்த பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது.

எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வெளிநாடுகளில் வசித்து வந்தாலும் தங்கள் பாரம்பரிய பழக்கவழக்கத்தை விடாமல் கடைபிடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒன் இந்தியா தமிழ் வாசகர் அமெரிக்காவை சேர்ந்த ராஜீ கோவிந்தரராஜன் தனது தமிழ்நாடு நண்பர்களுடன் எப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் என்பதை விவரித்துள்ளார்.

கலிபோர்னியாவின் மன்டேகாவை சேர்ந்தவர் தமிழர் ராஜீ கோவிந்தரராஜன். இவர் சென்டரல் வேலியில் 150 க்கும் மேற்பட்ட தமிழர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். தமிழக நண்பர்களை தமிழர் மரபுபடி வரவேற்று அவர்களுக்கு முதலில் இனிப்புகள் வழங்கப்பட்டன. அது போல் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையான போஸ்டர்கள் விழா அரங்கில் ஒட்டப்பட்டன.

விழா அரங்கு கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டது. சுவாமி சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் ஆகியவை இருந்தன. சிறிய கிராமம் போல் ஒரு வீடு அமைக்கப்பட்டு அங்கு களிமண்ணால் ஆன பானைகள் அமைக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு காளை கொண்டு வரப்பட்டது. கலாச்சார போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் பொங்கலை விவரிக்கும் வகையில் ஓவியம் வரைந்தனர். பெண்கள் குழு நடனம் ஆடினர், பறை இசைக்கப்பட்டது. அது போல் கித்தாரும் வாசிக்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், வடை, புளியோதரை. தேங்காய் சாதம், பிரியாணி, சப்பாத்தி, பூரி ஆகியவை பரிமாறப்பட்டன. தமிழ்நாட்டை சேர்ந்த நண்பர்களுடன் வெளிநாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடியது மகிழ்ச்சியாகவும் மறக்க முடியாத நிகழ்வாகவும் மாறிவிட்டது.