தமிழகத்தின் நிதிநிலை அதலபாதாளத்தில் உள்ளது- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..!

திருச்சி: தமிழகத்தின் நிதிநிலை அதலபாதாளத்தில் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி அமைக்கவோ, சமரசம் செய்யவோ ஒரு குறைந்தபட்ச தகுதி வேண்டும். அந்த தகுதி திமுகவுக்கு கிடையாது. எனவேதான், முதல்வர் அதை ஒப்புக்கொண்டு பாஜகவுடன் சமரசம் இல்லை எனக்கூறி இருக்கிறார்.

‘டெல்லிக்கு செல்வது குனிந்து கும்பிட அல்ல, சமரசத்துக்கு அல்ல’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், இப்படி வீர வசனம் பேசிவிட்டுச் சென்று, பிரதமரைச் சந்தித்தபோது அவர் முன்பு இருக்கையின் நுனியில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்கார்ந்திருந்தார். இவர்களின் வீர வசனமெல்லாம் பேசுவதற்கு மட்டும்தான். வாதத்துக்காக இவர்களாகவே பேசிவிட்டு, அங்கு சென்றவுடன் நடந்து கொள்ளும் விதம் வேறுமாதிரியாக உள்ளது.

இலவசங்கள் குறித்த தமிழக நிதியமைச்சரின் பேச்சு கைதட்டலுக்காக உள்ளது. ஒரு கருத்தைக் கூறினால் அதற்கு ஆதாரம், அர்த்தம் இருக்க வேண்டும். இலவசங்கள் கொடுத்ததால் தமிழகம் முன்னேறி உள்ளதா என்பதை தற்போதுள்ள அரசு, ஆணையம் அமைத்து ஆய்வு செய்து பார்க்கட்டும்.

தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்தில் உள்ளது. அப்படியிருக்கும்போது, எந்த அடிப்படையில் முன்னேறிக் கொண்டுள்ள அரசு என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார் எனத் தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ஒரு வேடமிடுவார். அந்த கட்சி ஐசியூவில் உள்ளது. அதிலிருந்து வெளியே வர பலகாலமாக முயற்சி எடுத்து வருகின்றனர். அதில் புதிதாக ஒன்றாக, தற்போது விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வர காங்கிரஸ் கட்சியினர் முயற்சிக்கின்றனர் என்றார்.