சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். அங்கு குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அவர் இன்று சந்தித்து பேசுகிறார்.
சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார். அத்துடன், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை இன்று மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் அவர் சந்திக்கிறார்.
தமிழக அரசின் நீட் விலக்குதொடர்பான மசோதா ஆளுநர்மூலம் குடியசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குதல், பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் செயல்படுதல், சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான அனுமதி ஆகியவை தொடர்பான சட்டமசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்கள் குறித்தும், தமிழக நிலவரம் குறித்தும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் ஆளுநர் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி பயணத்தை முடித்துவிட்டு வரும் ஆக.27- ம் தேதி சென்னை திரும்புவார் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.