முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 2ம் தேதி கேரளா பயணம்..!

சென்னை: திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா செல்கிறார்.

நாட்டின் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களிடையே உள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் கூறுவதற்காக தென்மண்டல கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் அந்தமான் நிகோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் வருகிற செப்டம்பர் 3ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் அந்தமான் நிகோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 2ம் தேதி திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.