இலங்கையிடமிருந்து எங்கள் படகுகளை மீட்டு தாருங்கள் – ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம் .!

லங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

கடந்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தப் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் ஆய்வு குழு ஒன்றை ஏற்படுத்தி அந்த குழுவினரை இலங்கைக்கு அனுப்பி படகுகளை ஆய்வு செய்து அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்க முடியாத படகுகளுக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே இழப்பீடு வழங்காமல் விடுபட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இதற்கு முன்பு பிடிபட்டு மீட்க முடியாமல் போன படகுகளுக்கு அரசு அறிவித்த 5 லட்ச ரூபாய் இழப்பீடு, 20 படகுகளுக்கு வழங்கப்படாமல் விடுபட்டு உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருநாட்டு மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம் மாவட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.