கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாசவேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உபாச சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். முபின் ஐ.எஸ். இயக்கத்தின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு அதன் ஆதரவாளராக இருந்து வந்தது அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் உறுதியானது. இந்த சம்பவத்தை இவர்கள் அரங்கேற்றுவதற்கு பின்னால் மிகப்பெரிய கும்பலே செயல்பட்டு வந்ததும், முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலக்காட்டில் சதி திட்டம் தீட்டியதும், அதற்காக ஆயுத பயிற்சி மேற்கொண்ட தகவலும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து முபின் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பட்டியலை தயாரித்தனர். இந்த பட்டியலின் அடிப்படையில் நேற்று கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கோவையில் நடந்தது கார் குண்டு வெடிப்பு என்றும், முபின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கர தகவலும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.
“இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:- இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முபின் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார். அதன்படி முதலில் கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் ஜமேஷா முபின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கு அவரது கூட்டாளிகள் 6 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து தான் ஜமேஷா முபின் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்துவதற்காக ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் சம்பவத்தன்று காரில் பயங்கர வெடிபொருட்களை நிரப்பி கொண்டு மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிக்கு சென்று வெடிக்க வைக்க திட்டமிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து, அதில் அவரே சிக்கி இறந்துள்ளார். இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடந்துவருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Leave a Reply