தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பவரா நீங்கள்?மருத்துவ சான்று கட்டாயம்!

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் பலகாரங்கள் தயாரிப்பவர்களுக்கு உடற்தகுதி மருத்துவச் சான்று கட்டாயம் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள்: பண்டிகை காலத்தில் இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்திருத்தல் அவசியம். அவ்வாறு பெறாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். விதிகளை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தரமான பொருட்களை கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், கலப்படமின்றியும் உணவுப் பொருட்களை தயாரிக்க வேண்டும். தரமான எண்ணெய், நெய்யை பயன்படுத்த வேண்டும்.

பரிசு பெட்டகங்களில் பேக்கிங் செய்யப்படும் இனிப்பு, காரம், உலர் பழ வகைகளில் உணவு பாதுகாப்புத் துறையின் விதிமுறைகளை பின்பற்றி லேபிள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும். தின் பண்டத்தின் பெயர், உற்பத்தி தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பால் பொருட்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும், பால் அல்லாத இனிப்பு பொருட்களும் தனித்தனியே பொட்டலமிட வேண்டும்.

விற்பனையகங்களில், உணவை கையாளுபவர்கள் கண்டிப்பாக தலையுறை, கையுறை, மேலங்கி அணிந்திருக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் மருத்துவ தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.வாடிக்கையாளர்கள் தரமில்லாத உணவு பொருட்கள் விற்கப்படுவதை அறிந்தால், 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.