சென்னை மின்சார ரயிலில் 4 பெட்டிகள் மட்டும் தனியாக கழன்று ஒடியதால் திடீர் பரபரப்பு – அலறிய பயணிகள்..!

சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில் இன்று அதிகாலை சைதாப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்பொது அதன் 4 பெட்டிகள் மட்டும் தனியே பிரிந்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதாவது,

சென்னை சென்ட்ரல் – திருவொற்றியூர் – எண்ணூர் – பொன்னேரி – கும்மிடிப்பூண்டி – சூலூர்பேட்டை – நெல்லூர் இணைப்பு (176 கி.மீ.), சென்னை கடற்கரை – எழும்பூர் – மாம்பலம் – திரிசூலம் – தாம்பரம் – திருமால்பூர் – தக்கோலம் – அரக்கோணம் இணைப்பு. (122.71 கி.மீ.), சென்னை கடற்கரை – எழும்பூர் – மாம்பலம் – திரிசூலம் – தாம்பரம் – செங்கற்பட்டு – மேல்மருவத்தூர் – திண்டிவனம் – விழுப்புரம் இணைப்பு (163 கி.மீ.), சென்னை சென்ட்ரல் – அம்பத்தூர் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் – திருத்தணி – ரேணிகுண்டா – திருப்பதி இணைப்பு. (151 கி.மீ.), சென்னை சென்ட்ரல் – அம்பத்தூர் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் – காட்பாடி – வேலூர் கண்டோன்மண்ட் – ஆரணி – திருவண்ணாமலை – திருக்கோவிலூர் – விழுப்புரம் இணைப்பு (290 கி.மீ.), சென்னை சென்ட்ரல் – அம்பத்தூர் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் – காட்பாடி – ஜோலார்பேட்டை இணைப்பு (213 கி.மீ.) என மொத்தம் 896 கி.மீ தொலைவுக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு வழக்கம்போல சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரயில் ஒன்று இயக்கப்பட்டது. இந்த ரயில் சரியாக அதிகாலை 5.55 மணிக்கு சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து இங்கிருந்து ரயில் புறப்பட்டபோது, அதன் கடைசி நான்கு பெட்டிகள் மட்டும் கழன்று பின்னோக்கி ஓடியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். ஆனால் இந்த ரயிலை இயக்கிய லோகோ பைலட்டுக்கு இந்த விஷயம் தெரியவில்லை. எனவே அவர் ரயிலை இயக்கியுள்ளார். இதற்கிடையில் கழன்று சென்ற அந்த ரயில் பெட்டிகள் பாதியிலிலேயே நின்றுள்ளன.

இந்த சம்பவத்தை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படையினர் இந்த வழியாக வரும் மற்ற ரயில்களுக்கு எச்சரிக்கை செய்தார். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த கழன்று சென்ற பெட்டிகளை இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..