ஸ்டாலின் சார் தோற்றாலும் ஜெயிச்சாலும் அவர் என் அங்கிள், ஸ்வீட் அங்கிள் என முதல்வர் விஜய் கிண்டல் செய்தார்.
ஸ்டாலின் சாரால் எம்எல்ஏ, எதிர்க்கட்சித் தலைவராக கூட முடியவில்லை என்றும் விமர்சித்திருந்தார்.
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மதுராந்தகத்திற்கு முதல்வராக வரவில்லை. பிரச்சாரத்திற்காக உங்கள் வீட்டுப் பிள்ளையாக வந்துள்ளேன். லஞ்சத்தை ஒழிக்க, பெண்கள் பாதுகாப்புக்காக உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா?
திமுக நம்மை பற்றி நாள்தோறும் ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மறைமுகமாக அதிமுக உள்ளிட்டோர் ஆதரவாக இருக்கிறார்கள். திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிக்கும் போதே அவர்கள் முகமூடி கிழிந்துவிட்டது.
நீங்கள் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பது பெண்களை ஆபாசமாக பேசுவதற்கு கொடுக்கும் மிகப் பெரிய தண்டனை, திமுகவுக்கு வாக்களித்தால் பெண்களை ஆபாசமாக பேசுவதற்கு ஆதரவளிப்பதற்கு சமம்.
அதிமுக தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது. சாமானியர்களுடன் விஜய் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்ய முடியாது, மக்கள் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டார்கள் என்பதற்காக தடுக்கிறார்கள்.
ஊழலை பற்றி பேசினால் நான் அப்போது பிறக்கவே இல்லை என்கிறார்கள். நான் எப்போது பிறந்தால் உங்களுக்கு என்னய்யா? ஊழல் என்றால் ஆதாரத்தை காட்ட சொல்கிறார்கள். காட்டினால் நீதிமன்றத்தில் நிரூபியுங்கள் என்கிறார்கள்.
ஏன், எதற்கு கத்துறாங்கன்னு ஒன்னும் புரியவில்லை. நான் குழம்பிவிட்டேன். பேசு பேசு என்கிறார்கள், பேசினால் பேச விடாமல் இருக்க கத்துகிறார்கள். ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
ஊழல் செய்தவர்களை விடவே மாட்டோம். மக்கள் பணத்தை தொட்டதில்லை, தொட மாட்டோம் என உங்களால் சொல்ல முடியுமா? ஸ்டாலின் சார் பாவம் அவர் தொகுதியில் தோற்று போய் இருக்கிறார், அவரை ஏன் விமர்சிக்கிறீர்கள் என பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஸ்டாலின் சார் தோற்றாலும் ஜெயித்தாலும் எனக்கு அங்கிள்தான், ஸ்வீட் அங்கிள் என்று விஜய் கிண்டல் செய்தார். இந்த பிரச்சாரத்தில் மரகதம் குமரவேல் ஏன் தவெகவில் இணைந்தார் என்பதை பேசினார். மேலும் முதல்வரானதும் மெட்ரோவை ஆய்வு செய்ய பாலத்திற்கு சென்றால், ஸ்டாலின் சார், “நான் கட்டிய பாலத்தில் நீங்கள் ஏன் ஆய்வு செய்கிறீர்கள் என்கிறார்?” இந்த பாலத்தை என்ன அவர் சொந்த காசிலா கட்டினார், அவரிடம் கார் , பைக் கூட இல்லை, வெறும் 10 ஆயிரம்தான் வைத்திருக்கிறாராம். அப்படியிருக்கும் போது அதில் எப்படி பாலம், மேம்பாலம் எல்லாம் கட்ட முடியும் என கேட்டு ஸ்டாலினின் வேட்புமனு தாக்கலில் குறிப்பிட்டிருந்த சொத்து கணக்கு குறித்து விஜய் கிண்டல் செய்திருந்தார்.
மதுராந்தகத்தில் ரோடு ஷோ நடத்தினார். அதற்கு முன்னதாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.









