தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதைத் தடுப்பதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் தொடர்ந்து பல்வேறு அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த திடீர் சோதனைகளின் போது கணக்கில் வராத கோடிக்கணக்கிலான லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மக்கள் தினமும் அதிகம் வந்து செல்லும் பத்திரப் பதிவுத் துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புச் சோதனைகளின் தொடர்ச்சியாக இந்தத் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பத்திரப் பதிவுத் துறையைச் சீரமைக்கும் வகையில் நேற்று ஒரே நாளில் 158 சார் பதிவாளர்களை திடீரென இடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த இடமாற்ற நடவடிக்கை அரசு நிர்வாக வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நேரத்தில் இத்தனை சார் பதிவாளர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளதால், பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நடவடிக்கை மூலம் பத்திரப் பதிவுத் துறையின் செயல்பாடுகள் இனி மிகவும் வெளிப்படையாகவும் வேகமாகவும் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிப்பதற்கும், நிர்வாகத்தைச் சீர்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.






