கோவை மத்திய சிறைவாசிகள் நல்வழிப்படுத்த சிறப்பு சுயதொழில் பயிற்சி முகாம்..!

கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் தடுப்பு காவல் என 2200 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தவும், விடுதலைக்குப் பிறகு மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க சுய தொழில் தொடங்கி அவர்கள் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள யோகா, கல்வி, தொழில் பயிற்சி, நூலகம் போன்ற பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி காவல்துறை இயக்குனர் சிறை மற்றும் சீர்திருத்த பள்ளி துறை தலைவர் அமரேஷ் பூசாரி அறிவுரையின்படி, கோவை சரராக சிறைத் துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதல் படியும் தண்டனை காலத்தினை முடித்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகள், சுயதொழில் துவங்கும் வகையில் அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் ஆண்கள் சிறையில் ஏர் கண்டிஷனர், வாஷிங் மெஷின் பழுதுபார்த்தல் பயிற்சி மற்றும் பெண்கள் சிறையில் சோப் ஆயில், பினாயில் தயாரித்தல் பயிற்சி வகுப்புகள் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் உதவி பொது மேலாளர் திருமலை ராவ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.